ஆர்க்டிக் பெருங்கடல்

ஆர்க்டிக் பெருங்கடல் அல்லது ஆர்க்டிக் சமுத்திரம் (Arctic Ocean) உலகத்திலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் ஒன்றாகும் [1]. புவியின் வடகோடியிலுள்ள வடமுனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே ஆர்க்டிக் கடலாகும். ஐம்பெருங்கடல்களில் மிகச் சிறியதும் ஆழமற்றதும் ஆர்க்டிக் பெருங்கடலேயாகும். இக்கடல் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. சர்வதேச நீர்நிலையியல் நிறுவனம் இக்கடலை ஒரு பெருங்கடல் என ஒப்புக்கொள்கிறது. இருப்பினும் சில கடலியலார் இதை ஆர்க்டிக் மத்தியதரைக் கடல் அல்லது வெறுமனே ஆர்க்டிக் கடல் என அழைக்கின்றனர், மேலும், இதை மத்தியதரை கடல் அல்லது அட்லாண்டிக் பெருங்கடலின் கழிமுகம் என்றும் வகைப்படுத்துகின்றனர் [2][3].
ஆர்க்டிக் கடலின் பெரும்பாலான கடற்பகுதி வடக்கு அரைக்கோளத்தின் நடுவில் ஆர்க்டிக் வடதுருவத்தில் அமைந்துள்ளது, இப்பெருங்கடல் கிட்டத்தட்ட முழுமையாகவே யூரேசியா மற்றும் வட அமெரிக்காவால் சூழப்பட்டுள்ளது. ஆர்க்டிக் கடலின் ஒரு பகுதி ஆண்டு முழுவதும் கடற்பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக குளிர் காலத்தில் முற்றிலுமாக பனிக்கட்டியாலேயே இக்கடல் மூடப்பட்டிருக்கும்.
கடற்பனியால் மூடப்பட்டிருந்த இப்பெருங்கடலின் மேற்பரப்பு உருகுதல், உறைதல் போன்ற காலநிலை மாறுபாடுகளால் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை காலத்திற்குக் காலம் மாற்படுகிறது[4]. ஆறுகள் மற்றும் நீரோடைகளில் இருந்து உள்வரும் அதிக நீர்வரத்து காரணமாகவும் குறைந்த அளவிலான வெளி இணைப்பு மற்றும் ஆவியாதல் காரணமாகவும், அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் நீரைச் சுற்றிலும் வெளியேற்றி விடுவதாலும் இதன் உப்புத்தன்மை ஐந்து பெருங்கடல்களின் சராசரியிலேயே மிகக் குறைந்த சராசரியைக் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]ஐரோப்பிய வரலாற்றின் பெரும்பகுதியில் வடக்கு துருவ மண்டலங்கள் மற்றும் அவற்றின் பூகோளக் கோட்பாடு பெரும்பாலும் அறியப்படாதவையாக இருந்தன. கிரேக்க ஆராய்ச்சியாளர் பெத்தியாசு என்பார் கி.மு 325 இல் வடதுருவத்தை நோக்கிச் சென்றார். இவரே ஆர்க்டிக் வட்டத்தை தன் பயணத்தில் முதலில் தொட்டுச் சென்றவர் ஆவார். இந்நிலப்பகுதியை இவார் எசுசாட் தலி என்று அழைத்தார். இங்கு சூரியன் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே மறைகிறது. எனவே தண்ணீராக மாற்றிக் கொள்ளும் பொருளாக இப்பகுதி இருப்பதால் ஒருவரும் நடக்கவோ மிதக்கவோ முடியாது. வளர்ந்து வரும் பனி அல்லது தளர்வான கடல் பனி என்று அவரால் விவரிக்கப்பட்ட இப்பகுதி இன்று நன்னீரைக் கொண்ட பனிமலைகள் என அறியப்படுகின்றன. அவரது கண்டுபிடிப்பான தலி ஒருவேளை நார்வேயாக இருக்கலாம். இருப்பினும் பரோயே தீவுகள் அல்லது செட்லாண்ட் ஆகக்கூட இருக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது[5].

நார்வே நாட்டுக்காரர்கள் ஆர்க்டிக் பகுதிக்கு முதலில் பயணம் மேற்கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் ஐசுலாந்து, கிரீன்லாந்து ஆகிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை குடியேற்றப் பகுதிகளாக மாற்றினர். 15 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும் டச்சுக் காரர்களும் இதற்கான கடற்பயணங்களைத் தொடங்கினர்.
பண்டைய நிலப்படமாக்குபவர்கள் வடதுருவத்தைச் சுற்றியுள்ள இப்பகுதியை வரைவதில் குழப்பமடைந்தனர். 1507 ஆம் ஆண்டின் யோகன்னசு ருசிய்ச்சு வரைபடத்தில் அல்லது 1595 ஆம் ஆண்டின் கெரார்டசு மெர்கட்டரின் வரைபடத்தில் இப்பகுதி நிலமாக வரையப்பட்டிருந்தது. 1507 ஆம் ஆண்டின் மார்ட்டின் வால்ட்மெமுல்லரின் உலக வரைபடத்தில் இப்பகுதி நீராக வரையப்பட்டிருந்தது. சீனப்பயணத்தின் மீது தணியாத ஆசை கொண்டிருந்த ஐரோப்பிய வணிகர்கள் தங்கள் வடக்குதிசை நோக்கிய பயணத்தின் இறுதியில் இதை நீர்ப்பகுதி என கண்டறிந்தனர். 1723 இல் யோகான் ஒமான் போன்ற நிலப்படமாக்குபவர்கள் தங்கள் வரைபடத்தில் இதைப் பயன்படுத்தினர்.
சில கடற்பயணிகள் இந்த சகாப்தத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அப்பாலும் ஊடுருவிச் செல்ல சில சோதனைகள் மேற்கொண்டனர். நோவாயா செம்லியா (11 ஆம் நூற்றாண்டு) மற்றும் சுபிட்ச்பெர்கன் (1596) போன்ற சில சிறிய தீவுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. இருப்பினும் இவை பெரும்பாலும் அடுக்கடுக்காய் பனிக்கட்டியால் சூழப்பட்டிருந்ததால் வடக்கு எல்லைகள் மிகவும் தெளிவாக இல்லை. கடற்பயண வரைபடத் தயாரிப்பாளர்களைக் காட்டிலும் நிலப்படமாக்குபவர்கள் பழமைவாதிகள் என்பதால் அவர்கள் இப்பகுதியை வெறுமனே விட்டுவிட்டு நன்கு அறியப்பட்ட கரையோரப் பகுதிகளை மட்டுமே தங்கள் வரைபடங்களில் காட்டினார்கள்.
நகரும் பனிமலைகளுக்கு அப்பால் வடக்கில் என்ன அமைந்திருக்கிறது என்பது தொடர்பான அறிவு இல்லாதது பல எண்ணற்ற கருத்துக்களுக்கு வழிவகுத்தது. இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் திறந்த துருவக் கடல் என்ற கட்டுக்கதை தொடர்ந்து இருந்தது. பிரிட்டானிய நிர்வாகத்தின் நீண்டகால இரண்டாம் செயலாளரான யான் பேரோ, 1818 முதல் 1845 வரை இந்தத் தேடலை ஆராய்வதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தார்.
1850 முதல் 1860 வரையிலான காலத்தில் எலிசா கேணி என்பார் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் தன் பயணத்தை மேற்கொண்டார். ஆர்க்டிக் ஆராய்ச்சியில் இவரது பயணம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஐசக் இசுரேல் ஏய்சு என்பாரும் எலிசா கேணியும் ஆர்க்டிக்கில் மழுப்பலாக நீர் இருப்பதாகத் தெரிவித்தனர்.
அந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கூட மேட் ஃபோண்டெயின் மவுரி என்பவர் அவரது பாடப் புத்தகத்தில் திறந்த துருவக் கடல் பற்றிய விவரிப்பை கூறியிருந்தார். இருப்பினும், துருவத்திற்கு அருகில் நெருங்கி நெருங்கி பயணம் செய்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் வடதுருவத்தின் உச்சி பனிக்கட்டியால் ஆனதென்றும் அதன் அடர்த்தி ஆண்டு முழுவதும் நீடிப்பதாகவும் தெரிவித்தனர். 1937 ஆம் ஆண்டில் சோவியத் உருசியர்கள் வடமுனையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்து விரிவாக ஆராயத் தொடங்கினர் [6].
புவியியல்
[தொகு]ஆர்க்டிக் பெருங்கடல் கிட்டத்தட்ட 14,056,000 கி.மீ2 (5,427,000 sசதுரமைல்) பரப்பைக் கொண்டுள்ளது. இது அண்டார்ட்டிக்காவின் அளவுக்கு சமமானதாகும்[7][8]. சுமார் 55 இலட்சம் சதுரமைல் பரப்பளவு கொண்ட இப்பெருங்கடல் ஆழமற்றது என்றும் உண்மையான கடல் அல்ல என்றும் கருதப்பட்டது. ஆனால் இக்கடலின் ஆழம் சுமார் 18000 அடிகள் வரை உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இப்பெருங்கடல் கடற்கரையின் நீளம் 45390 கிலோமீட்டர்களாகும்[7][9]

ஆர்க்டிக் சமுத்திரத்தில் பெரும்பகுதி கடற்பனியால் மூடப்பட்டுள்ளது. எனினும் இந்நிலை 1980 முதல் மாற்றமடைந்துள்ளது. 1980 முதல் வருடத்திற்கு 3% வீதம் குளிர்கால கடற்பனியின் பரப்பு குறைவடைந்து வருகின்றது. இதன் சராசரி கடற்பனி பரப்பு 15,600,000 km2 ஆகக் காணப்படுவதுடன் இது கோடை காலத்தில் 7,000,000 km2 (2,702,700 sq mi) வரை குறைவடையும்.


ஆர்க்டிக் பெருங்கடலின் வடிவம் வட்டமாக உள்ளது. கரைகள் தாழ்ந்துள்ளன. பேரண்டசு கடலும், கிரீன்லாந்து கடலும் இதன் துணை ஆறுகளாகும். உலகக் கடல்களில் மிகவும் குறைவாகப் புயல்கள் உண்டாவது இக்கடலில் தான்.
விரிவும் தரவுகளும்
[தொகு]உருசியா, நார்வே, ஐசுலாந்து, கிரீன்லாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆர்க்டிக் பெருங்கடலின் எல்லைகளில் அமைந்துள்ளன. தீவுகளில் மிகப்பெரியது கிரீன்லாந்து தீவு ஆகும்.
ஆர்க்டிக் பெருங்கடலைச் சுற்றிலும் பல துறைமுகங்கள் காணப்படுகின்றன [10] ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கில் அமெரிக்காவின் அலாசுகாவில் பாரோவ் என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது [11][12].
தட்பவெப்பநிலை
[தொகு]அண்டார்க்டிக் கண்டத்தைக் காட்டிலும் ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி குறைவு ஆகும். குளிர்ந்த பகுதிகள் தென் கிழக்குச் சைபீரியாவிலும் கனடவிலும் காணப்படுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகும் வெர்கோயான்சுக் இப்பகுதியில்தான் உள்ளது. கோடைக்காலம் குறுகியுள்ளது. குளிர்காலம் நீண்டது ஆகும். இருட்டும் குளிரும் இங்கு நிறைந்திருக்கும்.
கனிவளம்
[தொகு]உறைந்து கிடக்கும் ஆர்க்டிக் பகுதியில் 200 ஆண்டுகள் வரை கிடைக்கக் கூடிய நிலக்கரி புதைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. பெட்ரோலியமும் அதிக அளவில் இங்கு புதைந்துள்ளது. செப்பு, அலுமினியம், காரீயம், துத்தநாகம், தங்குதன், யுரேனியம், தங்கம் ஆகிய தனிமங்கள் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றன.
விலங்குகளும் தாவரங்களும்
[தொகு]பொதுவாக ஆர்க்டிக் விலங்குகளின் வகைகள் அதிகமில்லை. ஆழ்கடல் மீன்கள் வகை வகையாக இருக்கின்றன. கடல் நாய்கள், துருவக் கரடிகள் போன்றவை உணவுக்காகப் பயன்படுகின்றன. வால்ரசு மற்றும் திமிங்கலங்கள் போன்றவை அழிந்து வரும் கடல் இனங்களாக மாறியுள்ளன. இப்பகுதி எளிதாக அழிந்துபோகும் சுற்றுச்சூழல் சூழ்நிலை மண்டலமாக உள்ளது, இச்சூழல் மண்டலம் மெதுவாகவே மாற்றமடையும் மற்றும் மெதுவாகவே மீட்சியும் அடையும்.
ஆர்க்டிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் தவிர ஏனைய சிறிய தாவரங்களின் வாழ்வும் காணப்படுகிறது [13]. பைட்டோபிளாங்க்டன்கள் ஆர்க்டிக் பகுதியில் மிகப்பெரிய அளவில் உள்ளன, நதிகளிலிருந்தும் நீரோட்டங்களிலிருந்தும் அவை தங்களுக்கான ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன [14]. கோடை காலத்தில், இவை நீண்ட காலத்திற்கு ஒளிச்சேர்க்கை செய்து விரைவாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன. இருப்பினும், குளிர்காலத்தில் நிலைமை தலைகீழாகிறது. போதுமான வெளிச்சத்தை பெற இவை போராடுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Some Thoughts on the Freezing and Melting of Sea Ice and Their Effects on the Ocean K. Aagaard and R. A. Woodgate, Polar Science Center, Applied Physics Laboratory University of Washington, January 2001. Retrieved 7 December 2006.
- ↑ Pytheas பரணிடப்பட்டது செப்டெம்பர் 18, 2008 at the வந்தவழி இயந்திரம் Andre Engels. Retrieved 16 December 2006.
- ↑ North Pole drifting stations (1930s–1980s)
- ↑ 7.0 7.1 Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Stephen Fry.Stephen Fry in America[Documentary].London, United Kingdom 2009-01-24:British Broadcasting Corporation.
- ↑ Microbes flourish under Arctic sea ice; Scientists shocked to find phytoplankton thriving under frozen surface பரணிடப்பட்டது 2012-06-10 at the வந்தவழி இயந்திரம் July 28th, 2012; Vol.182 #2 (p. 17) Science News
- ↑ Physical Nutrients and Primary Productivity Professor Terry Whiteledge. National Oceanic and Atmospheric Administration. Retrieved 7 December 2006.
புற இணைப்புகள்
[தொகு]- The Hidden Ocean Arctic 2005 Daily logs, photos and video from exploration mission.
- Oceanography Image of the Day, from the Woods Hole Oceanographic Institution
- Arctic Council
- The Northern Forum